விண்வெளி துறையில் இந்தியாவுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? சோம்நாத் பதில்
புதுடில்லி: ''விண்வெளி துறையில் இந்தியா செலவு செய்யும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கு நமக்கு 2.52 ரூபாய் வருமானம் கிடைக்கிறது'' என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: விண்வெளித்துறையை பொறுத்தவரை, நாம் நிறைவேற்றிய திட்டங்கள், அடிப்படையில் இந்த ஆண்டு இந்தியாவிற்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பிரதமரின் கொள்கை அடிப்படையில் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து உள்ளோம். விண்வெளி திட்டங்களின் வரலாற்றில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்கள் தற்போது முதல்முறையாக வகுக்கப்பட்டு உள்ளது.
இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நிலவில் நமது தேசியக் கொடி பறக்கும்.அதனை இந்தியர் ஒருவர் அங்கு சென்று வைத்துவிட்டு பத்திரமாக திரும்புவார். இதுதான் 2040ல் நமது இலக்கு
250 விண்வெளி ஸ்டார்ட் அப்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் இந்தியாவின் விண்வெளி துறைக்கு ஊக்கம் அளித்து வருகிறது. விண்வெளி துறையில் இந்தியா செலவு செய்யும் ஒரு ரூபாய்க்கு நமக்கு 2.52 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. விண்வெளி திட்டங்களானது, அறிவியல் தாண்டி இந்தியாவுக்கு பலன்களை அளிக்கிறது. இவ்வாறு சோம்நாத் கூறினார்.
இஸ்ரோவின் திட்டங்களின்படி 2035க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கு என சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2040க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவில் தரையிறங்க வைப்பது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் முன்னோட்டமாக சந்திரயான் 4 விண்கலம் உள்ளிட்ட பல விண்கலங்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது.