நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அதிர்ச்சி: துணை ஜனாதிபதி
புதுடில்லி: '' ராஜ்யசபாவில் எனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்த வரிகள் அதிர்ச்சியை கொடுத்தது,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதில் 60 எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டனர்.ஆனால், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. விளம்பரம் தேடும் நோக்கத்தில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்று இருந்ததால் அத்தீர்மானம் தள்ளுபடி செய்வதாக ராஜ்யசபா துணைத் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், டில்லியில் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியதாவது: எனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அளித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தவை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு சமையலறை கத்தியை கொண்டு வர வேண்டாம் என முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கூறியிருந்தார். ஆனால், அந்த தீர்மானத்தை எழுதியவர்கள் துருப்பிடித்த கத்தியை பயன்படுத்தி இருந்தனர். அதை படித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், பத்திரிகையாளர்கள் அதனை படிக்கவில்லை. அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள், பழைய பகையை தீர்த்துக் கொள்ளக்கூடாது. ராஜ்யசபாவில் எனது உத்தரவுகள் அனைத்தும் அரசியலமைப்பு விதிகளால் உறுதிபடுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.