கனவு நனவானது * ஹர்லீன் தியோல் உற்சாகம்
வதோதரா: ''இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும், அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எனது கனவு நனவானது,'' என ஹர்லீன் தியோல் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரண்டாவது போட்டி வதோதராவில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு, பேட்டிங்கில் சதம் அடித்து கைகொடுத்தார் ஹர்லீன் தியோல் (115 ரன்). இதனால் இந்தியா எளிதாக வெற்றிபெற, தொடரை வசப்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் இடது கணுக்கால் காயத்துக்கு ஆப்பரேஷன் செய்த ஹர்லீன், தற்போது அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:
ஆப்பரேஷனுக்குப் பின் இதில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டேன். அப்போது, 'மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும், வெற்றி பெற்றுத் தர வேண்டும்,' என்ற லட்சியத்துடன் இருந்தேன். தற்போது சதம் அடித்து, அணிக்கு வெற்றி பெற்றுத் தந்ததால், எனது கனவு நிறைவேறியுள்ளது.
இது எனக்கு மிகவும் பெருமையான தருணம். இதற்காகத் தான் நீண்ட நாள் காத்திருந்தேன். அடுத்து வரும் போட்டியிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். மற்றபடி அணியில் யாரையும் எனக்கு போட்டியாளராக நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு, நான் தான் மிகப்பெரிய போட்டியாளர்.
இவ்வாறு ஹர்லீன் கூறினார்.