எனக்கு வருத்தம் இல்லை * என்ன சொல்கிறார் அஷ்வின்

சென்னை: ''எனக்காக விழா எடுக்கவில்லை என்பதில் எவ்வித வருத்தமும் இல்லை,'' என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 38. தமிழகத்தை சேர்ந்த இவர், 106 டெஸ்டில், 537 விக்கெட் சாய்த்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் 65, கூறுகையில்,''அஷ்வினை கடைசியாக ஒரு பிரிவு உபச்சார போட்டியில் பங்கேற்க வைத்து, சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும். இதற்கான தகுதி அவருக்கு உள்ளது,'' என்றார்.
இதுகுறித்து அஷ்வின் கூறியது:
என்னை பொறுத்தவரையில் விழா எடுப்பதே தவறு தான். எனக்காக யாரும் விழா எடுக்க வேண்டாம், கண்ணீர் சிந்த வேண்டாம். ஏனெனில் இது ஒரு 'சூப்பர் செலிபிரிட்டி' கலாசாரம். எனது சாதனைகளை பாராட்டுங்கள், நான் விடை பெற்றதை நினைத்து பெருமைப்படுங்கள். எனது பேச்சை பார்த்து மகிழுங்கள். ஆனால் எனக்காக விழா எடுப்பது தவறானது. விழாவுக்காக போட்டியில் பங்கேற்பது, கிரிக்கெட்டுக்கு செய்யும் அவமதிப்பாக நினைக்கிறேன்.
மற்றபடி கபில்தேவ் சொல்வது 100 சதவீதம் சரியானது தான். அதை நான் குறைத்து மதிப்பிட வில்லை. ஏனெனில் அவரைப் பார்த்து தான் வளர்ந்துள்ளேன். ஆனால், எனக்காக விழா எடுக்கவில்லை என்பதில் எவ்வித வருத்தமும் இல்லை. இல்லாத ஒன்றுக்கு வருத்தப்படுவதில் நியாயம் இல்லை. இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதே எனக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement