அரசு பணத்தை திருடி காதலிக்கு சொகுசு பங்களா பரிசு: தலைமறைவான ஒப்பந்த ஊழியருக்கு வலைவீச்சு
மும்பை: ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் ஊழியர் ஒருவர் அரசின் ரூ.21.5 கோடி திருடி, காதலிக்கு சொகுசு பங்களா பரிசளித்ததுடன், சொகுசு கார், விலை உயர்ந்த டூவீலர் வாங்கியது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிபவர் ஹர்ஷ்குமார் ஷிர்சாகர். இவரது மாத சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் மட்டும். ஆனால், அவர் கடந்த சில நாட்களாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணையில் அவரிடம் சொகுசு கார், விலை உயர்ந்த பைக் இருப்பதும், , விமான நிலையம் அருகே 4 பிஎச்கே பிளாட் ஒன்றை வாங்கி காதலிக்கு பரிசு அளித்ததும் தெரியவந்தது. இதற்கான பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்தது. அதில் விளையாட்டு ஆணையத்தின் நிதியில் இருந்து 21 கோடியே 59 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை 'நெட் பேங்கிங்' மூலம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த ஹர்ஷ்குமார் ஷிர்சாகர் சொகுசு காருடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விசாரணையில், மற்றொரு பெண் ஊழியர் ஒருவர் ரூ.35 லட்சம் திருடியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.