ராஜஸ்தான் ஜோடி தங்கம்: தேசிய துப்பாக்கி சுடுதலில்
புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' பிரிவில் ராஜஸ்தானின் மகேஷ்வரி, அனந்த்ஜீத் சிங் ஜோடி தங்கம் வென்றது.
டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 'ஸ்கீட்' கலப்பு அணிகளுக்கான பைனலில் ராஜஸ்தானின் மகேஷ்வரி சவுகான், அனந்த்ஜீத் சிங் நருகா ஜோடி, உத்தர பிரதேசத்தின் மைராஜ் அகமது கான், அரீபா கான் ஜோடியை எதிர்கொண்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மகேஷ்வரி, அனந்த்ஜீத் ஜோடி 44-43 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. பஞ்சாப்பின் கனேமத், அபய் சிங் செகோன் ஜோடி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஜூனியர் 'ஸ்கீட்' கலப்பு அணிகள் பிரிவு பைனலில் மத்திய பிரதேசத்தின் ஜோதிராதித்யா சிங், மான்சி ரகுவன்ஷி ஜோடி 4-2 என 'ஷூட்-ஆப்' முறையில் ஹரியானாவின் இஷான் லிப்ரா, சஞ்சனா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. தெலுங்கானாவின் முனெக் பட்டுலா, சஹ்ரா தீசவாலா ஜோடி வெண்கலம் பெற்றது.