அஷ்வின் சாதனையை சமன் செய்தார் பும்ரா: ஐ.சி.சி., தரவரிசையில்
துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்ட இந்தியாவின் பும்ரா, அஷ்வின் சாதனையை சமன் செய்தார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (904 'ரேட்டிங்' புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். பிரிஸ்பேன் டெஸ்டில் 9 விக்கெட் சாய்த்த இவருக்கு 14 'ரேட்டிங்' புள்ளி கிடைத்தது.
இதன்மூலம் இவர், டெஸ்ட் பவுலர் தரவரிசையில் அதிக 'ரேட்டிங்' புள்ளி (904) பெற்ற இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2016, டிசம்பரில் வெளியான தரவரிசையில் அஷ்வின், 904 'ரேட்டிங்' புள்ளி பெற்றிருந்தார். மெல்போர்ன் டெஸ்டில் பும்ரா சாதிக்கும் பட்சத்தில் இப்பட்டியலில் அஷ்வினை முந்தலாம்.
சமீபத்தில் ஓய்வை அறிவித்த அஷ்வின் (789) 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தென் ஆப்ரிக்காவின் ரபாடா (856), ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (852) முறையே 2, 3வது இடத்தில் உள்ளனர்.
பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (895), ஹாரி புரூக் (876), நியூசிலாந்தின் வில்லியம்சன் (867) 'டாப்-3' வரிசையில் உள்ளனர். பிரிஸ்பேன் டெஸ்டில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (825) 4வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் சதம் விளாசிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (721) 10வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் ஜெய்ஸ்வால் (805) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (424) முதலிடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் (277) 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.