வாலிபர்களை தாக்கிய வழக்கு வக்கீல் உட்பட நால்வர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வாலிபர்களை சரமாரியாக தாக்கிய வழக்கில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த வக்கீல் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் ஐயப்பன் மகன் பிரகாஷ், 26, நண்பர்கள் வேல்அழகன், பாலாஜி, குருவன்குப்பம் வெங்கடேசன் மகன் சித்தார்த் ஆகியோர், கடந்த 25ம் தேதி மாலை, அங்குள்ள தனியார் சாராய ஆலை மைதானத்தில் மது அருந்தினர்.

அங்கு வந்த கோட்டேரி வழக்கறிஞர் ராஜா, அவரது ஆதரவாளர்களுடன் கத்தி, பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த நால்வரில் இருவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து பிரகாஷ் புகாரின் பேரில், வழக்கறிஞர் ராஜா உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து, தங்கவேல் மகன் சுப்ரமணியன், 57, காசிநாதன் மகன் பிரபாகரன், 28, செல்வநாயகம் மகன் கஜா (எ) ராமகஜேந்திரன், 25, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார், புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த தேவேந்திரன் மகன் வழக்கறிஞர் ராஜா, 35, சுப்ரமணியன் மகன் வீரபாண்டியன், 29, முருகன் மகன் ஜெயபாலன், 28, குணசேகர் மகன் விஜய், 26, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement