விவசாயம் பாதிக்காமல் நிலம் எடுக்கப்படும்! தொழில்துறை அமைச்சர் உறுதி 

1

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில், 'பொள்ளாச்சி திருவிழா' நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக நடக்கிறது. அதில், வணிக பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பொள்ளாச்சியில் நடந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:

தமிழகத்தில், தொழில்கள் துவங்க, வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எவ்வித அச்சமும் இன்றி செயல்படலாம் என்பதால், முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முதல்வர் பாடுபடுகிறார்.

பொள்ளாச்சியில், எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் சிறப்பாக செயல்படுத்தலாம். அந்தளவுக்கு தொழில்துறையினரிடையே புரிதல், திறன் உள்ளது. இங்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கும்.

பொள்ளாச்சியில், தொழிற்சாலைகளை கொண்டு வரலாம்; அதற்கான நிலம் தான் இல்லை. தொழில் முனைவோர்கள் இணைந்து, 500 ஏக்கர் நிலம் கொடுத்தால், தொழிற்சாலையை கொண்டு வந்துவிடலாம். ஜவுளி தொழிலில் விரைவில் அதிக முதலீடுகள் வரவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொழில்துறைக்கு எங்கு நிலம் எடுத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தான் நிலம் எடுக்கப்படும். நானும் டெல்டாக்காரன்; விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் தெரியும். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாமல் சர்ச்சைகளை ஏற்படுத்தி புகைச்சலை ஏற்படுத்தக்கூடாது. அரசியல் காரணங்கள், அர்த்தமற்ற காரணங்களை கூறி தடுத்து நிறுத்தக்கூடாது. அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தென்னைக்கு மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கான நீர்நிலைகள் மீட்க அரசு உதவிக்கரமாக இருக்கும்.

கோவை விமான விரிவாக்கத்துகாக தமிழக அரசு, 2,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு நிலம் வழங்கப்பட்டது.

தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கும் சூழலில், மாநில அரசு பங்கு உள்ளதால், தமிழக அரசுக்கு பங்கீடு வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம். இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement