பணிகள் முடிந்தும் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராத மேம்பாலம் புள்ளிமான்கோம்பை - வத்தலக்குண்டுவிற்கு 10 கி.மீ., சுற்றிச்செல்லும் அவலம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், நடுகோட்டை, பெரியகுளம் ஒன்றியம் ஏ.வாடிப்பட்டி கிராமங்களை இணைக்க ரூ.8.50 கோடி மதிப்பில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ஆண்டிபட்டி - வத்தலகுண்டு செல்லும் வாகனங்கள் 10 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான்கோம்பை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு 32 கி.மீ., தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் தொடர்பஸ் வசதி இருந்தும் 32 கி.மீ.,தூரத்தைக் கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது.

இந்த வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பயண நேரத்தை குறைக்கவும் 22 கி.மீ., தூரத்தில் வத்தலக்குண்டு செல்ல, ஆண்டிபட்டியில் இருந்து நடுகோட்டை - ஏ.வாடிப்பட்டி இணைப்பு ரோடு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் உருவானது.

வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் செயல் வடிவம் பெற தாமதம் ஏற்பட்டது.

நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.8.50 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

இரவு 10:00 மணிவரை பஸ் வசதி தேவை



அழகர்சாமி, தர்மத்துப்பட்டி: புள்ளிமான்கோம்பையில் இருந்து காமாட்சிபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, ராம்நாயக்கன்பட்டி, விராலிபட்டி, பழைய வத்தலகுண்டு, வத்தலகுண்டு வரை உள்ள ரோடு பல இடங்களில் குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

குவாரி, கிரஷருக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. நடுகோட்டை - ஏ.வாடிப்பட்டி ரோடு அகலமானது. போக்குவரத்து நெருக்கடிக்கு வாய்ப்பில்லை.

விவசாயிகள் விளை பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும். ஆண்டிபட்டி - வத்தலகுண்டு வழித்தடத்தில் இரவு 9:00 மணிக்குப்பின் பஸ் வசதி இல்லை. இரவு 10:00 மணி வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும்.

இணைப்பு ரோடு பணியை முடிக்க வேண்டும்



ராஜமுருகன், நடுகோட்டை: ரூ.8.50 கோடி மதிப்பில் பாலம் வேலைகள்தான் முடிந்துள்ளது.

புதிய பாலத்தில் இருந்து நடுகோட்டை வரையும், மறுபக்கம் ஏ.வாடிப்பட்டி வரையும் 100 மீட்டர் தூரம் ரோடுகள் இணைக்கப்படவில்லை. பாலத்தின் வடக்கு பக்கம் வைகை அணை பாசனக்கால்வாயில் பாலம் குறுகலாக உள்ளது. இதனை பெரிய பாலமாக மாற்றினால் மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல முடியும்.நடுகோட்டை - ஏ.வாடிப்பட்டி இணைப்பு ரோடு முழுமை பெற்றால் இப்பகுதி மக்கள் எளிதில் ஏ. வாடிப்பட்டி வழியாக வத்தலகுண்டு, குள்ளப்புரம் வழியாக பெரியகுளம், ஆண்டிபட்டி வழியாக தேனி சென்று வர முடியும். போக்குவரத்து எளிதானால் இப்பகுதி கூடுதல் வளர்ச்சி பெறும். தமிழக அரசு இப்பிரச்சினையில் முழு கவனம் செலுத்தி பாசனக்கால்வாயில் புதிய பாலம் அமைக்கவும், இணைப்பு ரோடு திட்டத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.---

Advertisement