மதுரை டைடல் பார்க் திட்டத்தில் சாதிக்க தவறிய ஐ.டி., அமைச்சர் திருச்சியை ஒப்பிட்டு அ.தி.மு.க., கேள்வி

மதுரை : ''மதுரையில் டைடல் பார்க் திட்டம் முதலில் அறிவித்த போதும் திருச்சியை விட குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஏன். ஐ.டி., துறை அமைச்சராக தியாகராஜன் இருந்தும் உள்ளூர் திட்டத்திற்கு அதிக நிதியை பெற தவறிவிட்டார்,'' என, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குற்றம்சாட்டியது.

மாநகராட்சி கூட்டம் தி.மு.க., மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசியதாவது: தமிழகத்தில் டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டபோது மதுரையிலும் ரூ. 289 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாட்டுத்தாவணியில் மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதற்கான கட்டடம் 40 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ளது.

இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்பின் திருச்சிக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அங்கு ரூ. 415 கோடியில் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.டி., துறை அமைச்சர் தியாகராஜன் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தும் சொந்த மாவட்டத்திற்கு அதிக நிதியை பெற்றுத்தர தவறி விட்டார்.

திருச்சி போன்று இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தால் கூடுதலாக சில ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்று கூடுதல் நிதி ஒதுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

மேயர், ''இதுகுறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்,'' என்றார்.

Advertisement