அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதா

மதுரை : மதுரை மேலுாரில் உள்ள அரிட்டாப்பட்டி சுற்றுச்சூழலை அழித்து டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் சாந்தலிங்கம், வேதாச்சலம் கூறியதாவது:

மதுரை மேலுாரில் உள்ள கழிஞ்சமலையில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு தொன்மையான சமணத்தலம். 7 - 8 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முற்காலப்பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை சிவன் கோயிலும் உள்ளது. தமிழகத்தில் அரிதாக கிடைக்கப்பெற்ற லகுலீசர் சிற்பம் இங்கும் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் பாதிரிக்குடி எனப்பட்டது. இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும் இங்குள்ள தீர்த்தங்கரர் சிலையை செய்ய வைத்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் ஏற்கனவே தெரிந்த விஷயம்.

இந்த ஊரில் 13 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் அழிந்து விட்டதை அதன் கட்டுமான கற்கள், கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இந்த ஊர் ஐநுாற்றுப் பெருந்தெரு என்ற பெயரில் வணிகத்தலமாக இருந்ததை கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் கால செப்பேட்டில் காவல் முக்கியத்துவம், ராணுவ நடவடிக்கை போன்ற செயதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரிட்டாப்பட்டிக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் மாங்குளம் என்றும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் செதுக்கப்பட்டதை 1882 ல் ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவல் கண்டறிந்துள்ளார். மேலும் இக்கல்வெட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது. வரலாற்று முக்கியத்துவமும் பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாப்பட்டியில் மத்திய அரசு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயற்சிப்பதை எதிர்க்கிறோம்.

ஒருபுறம் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் மத்திய அரசு, மதுரையின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதை கண்டிக்கிறோம். அரிட்டாப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்றனர்.

Advertisement