'மெய்'யழகன் சுந்தர்
புனேயில் இம்மாத துவக்கத்தில் குளோபல் மாடல் இந்தியா அமைப்பு சார்பில் நடந்த தேசிய மாடலிங் போட்டியில் பங்கேற்று தமிழகத்துக்கு விருது பெற்று தந்திருக்கிறார் 'மிஸ்டர் இந்தியா -2024' சுந்தர். ஐ.டி., துறையில் ரூ.பல லட்சம் வருவாய் பணியை உதறி விட்டு பாடி பில்டிங் மீதான ஆர்வத்தால் இத்துறையில் இறங்கி இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
சினிமா, அரசியல் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இவரது 'ைஹ டிரான்ஸ்பார்ம்' பிட்நெஸ் சென்டரின் வாடிக்கையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.
மற்ற துறைகளுக்கு இணையாக மாடலிங், பாடி பில்டிங் துறைகளில் இளைய தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுவது, எப்படி மிஸ்டர் இந்தியா பட்டம் சாத்தியமானது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பகிர்ந்து கொண்டார்.
இனி அவரே தொடர்கிறார்... திருவண்ணாமலை மாவட்டம் நரசிங்கபுரம் சொந்த ஊர். அங்கு பள்ளி படிப்பை முடித்து ஈரோட்டில் கல்லுாரி படிப்பை முடித்தேன். பிறகு சென்னையில் பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கொரோனா காலகட்டத்தில் ஐ.டி., நிறுவனங்கள் பல சவால்களை சந்தித்தன. ரூ.பல லட்சம் வருவாய் கிடைத்த அத்துறையை விட்டு பிட்நெஸ் துறையை தேர்வு செய்தேன்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே உடற்பயிற்சி, ஓட்டத்தில் ஆர்வம் உண்டு. கல்லுாரி காலத்தில் தினமும் நடை, உடற்பயிற்சி என தொடர்ந்தது. ஐ.டி., நிறுவன பணியில் சேர்ந்த பிறகும் பிட்நெஸ் சென்டருக்கு தவறாமல் சென்று விடுவேன். அந்த ஆர்வம் தான் இத்துறைக்கு என்னை கொண்டு வந்தது.
சென்னையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பிட்நெஸ் சென்டர் துவங்கினேன். அப்போது நிபுணத்துவம் இல்லாததால் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. வருவாய்க்காக தனிநபர்களுக்கு பிட்நெஸ் பயிற்சியளித்து வந்தேன். ஆனால் சினிமா, அரசியல், அரசு, ஐ.டி., உள்ளிட்ட துறைகளை சேர்ந்த இளையதலைமுறையினர் பிட்நெஸ் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதையறிந்து சென்னையில் சென்டரை எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கினேன்.
இங்கு அளிக்கப்படும் பயிற்சி, உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களை அறிந்து சினிமா, அரசியல் பிரபலங்கள் என்னை அணுகினர். அவர்களது 'பிரைவசி'கருதி ஒவ்வொரும் தனித்தனியாக ஒதுக்கிய நேரத்துக்கு என் சென்டருக்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.
உடல் நன்றாக இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இதை இளைய தலைமுறையினர் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி.
சில சினிமா பிரபலங்கள் திரைப்படங்களுக்காக உடல் எடையை குறைக்க, அதிகரிக்க வருவர். படம் முடிந்த பிறகு அவர்களும் தொடர்ந்து பயிற்சி பெறுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். தற்போதைய உணவு, பழக்கவழக்கம், காலச்சூழலுக்கு ஏற்ப உடல் நலனை பேணுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். எது எதற்கோ செலவழிக்கும் பலர் பிட்நெஸ் பயிற்சிக்காக மாதம் ஆயிரம் செலவிட தயங்குவது வேடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் தான் குளோபல் மாடல் இந்தியா அமைப்பு நடத்தும் மிஸ்டர் இந்தியா, யுனிவர்ஸ் போட்டிகளை அறிந்தேன். பாடி பிங்டிங் போட்டிகளை விட இப்போட்டிகள் வித்தியாசமானது. பாடி பில்டிங் போன்று உடல் கட்டமைப்பாக இருப்பதுடன் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும். தலைமுடி வரை கால் நகம் வரை அழகாக பராமரிப்பவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இதற்காக தனியாக மெனக்கெட வேண்டியிருந்தது. ரேம்ப்வாக்கிங் தொடர்பாக இலங்கை சென்று ஒரு மாதம் பயிற்சி பெற்று வந்தேன். ஆங்கில உச்சரிப்பு, கேள்விகளுக்கு திறமையாக பதிலளிப்பது, பல்வேறு திறன்களை கொண்டிருப்பது என பல வகையில் இப்போட்டிக்கு தயாரானேன்.
புனேயில் இம்மாத துவக்கத்தில் நடந்த மிஸ்டர் இந்தியா - 2024 போட்டிகளில் 16 மாநிலங்களிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் பத்து நபர்களில் ஒருவராக, பிறகு ஐந்து பேரில் ஒருவராக தேர்வாகி இறுதிச்சுற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றேன். சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளேன். அந்த போட்டியிலும் வெல்வேன் என்றார் நம்பிக்கையுடன்.
வெற்றி பெற வாழ்த்த 97104 44023