மன்மோகன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
புதுடில்லி, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், முழு அரசு மரியாதையுடன் டில்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த அவர், முன்னதாக மத்திய நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 1990களில், நாட்டின் பொருளாதாரம் வீழும் நிலையில் இருந்தபோது, அதை மீட்டெடுத்தவர் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்.அவர், அந்த காலகட்டத்தில் மேற்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையே, நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
முழு அரசு மரியாதை
ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் என, மத்திய அரசின் உயர் பதவிகளை வகித்த அவர், உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
அவருக்கு அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, டில்லியின் நிகம்போத் காட்டில் அவருடைய உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவருடைய மூத்த மகள் உபிந்தர் சிங், சிதைக்கு தீ மூட்டினார்.
முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் தளபதிகளும், மறைந்த தலைவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து மத பாடல்கள் ஒலிக்க, 21 குண்டுகள் முழங்க, மன்மோகன் சிங்குக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
முன்னதாக, மோதிலால் நேரு சாலையில் உள்ள வீட்டில் இருந்து மன்மோகன் சிங்கின் உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி வைக்கப்பட்டு, மயானத்துக்கு ஊர்வலகமாக எடுத்து வரப்பட்டது.
வழியெங்கும் பொதுமக்களும், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களும், மன்மோகன் சிங் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.
மலர் வளையம்
இறுதிச் சடங்குகளில், நம் அண்டை நாடான பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வான்சுக், மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்சய் ராம்புல் பங்கேற்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று சூரிய அஸ்தமனம் வரை, தங்களுடைய நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என, மொரீஷியஸ் அரசு கூறியிருந்தது.
மன்மோகன் சிங் மறைவுக்கு, மொரீஷியஸ் பிரதமர் நவின் ராம்கோலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நேற்று நடந்த நிலையில், அவருக்கு நினைவிடம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என, காங்கிரஸ் நேற்று முன்தினம் கோரியிருந்தது.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து, நிகம்போத் காட் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.இதற்கு காங்கிரசின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 'மறைந்த தலைவருக்கு நினைவிடம் கட்டும் வகையில், தனியாக இடத்தை ஒதுக்காதது, சீக்கியர்களை இழிவுபடுத்தும் செயல்' என, அவர் கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 'மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்படும். இது தொடர்பாக அறக்கட்டளை அமைக்க வேண்டியுள்ளது. அதனால், இறுதிச் சடங்குகள் முறையாக நடக்கட்டும்' என, அதில் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மன்மோகன் சிங் மறைவை வைத்து, மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மறைந்தபோது, அவரது உடலை கட்சி அலுவலகத்துக்குள் கொண்டு செல்வதற்கே அனுமதிக்கவில்லை. பா.ஜ., அரசு தான், அவருக்கு நினைவிடம் கட்டியது. மேலும், பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.அதுபோல, காங்கிரஸ் மூத்த தலைவரான, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைந்தபோது, அவருக்கு கட்சி முறையாக இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது மகளே குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டில்லியில், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு தனியாக நினைவிடம் கட்டுவதற்கு, காங்கிரஸ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, தற்போது கீழ்த்தரமான அரசியலை செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.