குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

அன்னுார்; அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பால், நான்கு நாட்களாக, தண்ணீர் வீணாகிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், குன்னத்தூராம்பாளையத்தில், ஆறாவது நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்திலிருந்து, அன்னுார், காரமடை, எஸ்.எஸ்.குளம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது.

இதில் சில இடங்களில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாகி வருகிறது. அன்னுாரில், சத்தி ரோட்டில், அண்ணா நகர் பஸ் ஸ்டாப் எதிர்ப்புறம், அத்திக்கடவு குழாயில், கடந்த 26ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து தண்ணீர் வெளியேறி,தெற்கே அல்லிகுளம்பிரிவு வரை, 600 மீ., தூரத்திற்கு வாய்க்கால் போல் செல்கிறது. சாலையின் மேற்கு பகுதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளுக்கும், கடைசியில் சிறிதளவு அல்லிகுளம், குளத்திற்கும் இந்த நீர் செல்கிறது.

இது குறித்து அண்ணா நகர் மக்கள் கூறுகையில், 'இரு வாரங்களுக்கு முன்பும் இதே போல் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரம் தண்ணீர் வீணானது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 26ம் தேதி முதல் தண்ணீர் வீணாக பள்ளத்திலும், தரிசு நிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை அன்னுார் வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வினியோகம் செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக பள்ளத்தில் செல்வது வேதனை அளிக்கிறது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement