ஆகம விதிகளை மீறாதது தி.மு.க., அரசு: சேகர்பாபு

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சுவாமி படங்களுடன் கூடிய, 2025ம் ஆண்டுக்கான காலண்டரை, ஆணையர் அலுவலகத்தில் நேற்று துறையின் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:

அறநிலையத்துறை சார்பில், 2023 முதல், தெய்வங்களின் உருவப்படங்களுடன் கூடிய காலண்டர் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு, 1,200 பெரிய காலண்டர் தயார் செய்து, அரசு அலுவலகங்களுக்கு வழங்கினோம்.

கடந்த ஆண்டு, 30,000; இந்த ஆண்டு, 25,000 சிறிய காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. சட்ட விதிகளை பின்பற்றி, அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். திருச்செந்துார் கோவிலில், அர்ச்சகர்கள் பணம் பெற்று தரிசனம் செய்ய வைப்பதாக புகார் எழுந்தது.

இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கோவில்களில் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என தி.மு.க., அரசு செய்யாது.

ஜனநாயக ரீதியில் கருத்து கேட்டு, ஆன்மிகவாதிகள், சமய பெரியோர் துணையோடு, மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஆகம விதிகளை மீறாத அரசாக, தி.மு.க., அரசு உள்ளது.

தொன்று தொட்டு வரும் பழக்கங்களை உடைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில், மொபைல் போன் போடப்பட்ட விவகாரத்தில், ஜன., 2,3ம் தேதிகளில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Advertisement