நேந்திரன் வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்; நேந்திரன் ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில் தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும்.
நேற்று நடந்த ஏலத்திற்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 4500க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு, நேந்திரன் வாழைக்காயின் விலை உயர்வாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறியதாவது: ஏல மையத்திற்கு, நன்கு முதிர்ந்த நேந்திரன் வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதனால் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய், குறைந்த பட்சம், 30க்கும் அதிகபட்சம், 60 ரூபாய்க்கும், கதலி குறைந்தபட்சம், 15, அதிகபட்சம், 35 ரூபாய்க்கு ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் குறைந்த பட்சம், 150, அதிகபட்சம், 450 ரூபாய்க்கும், செவ்வாழை அதிகபட்சமாக, 1,200, தேன் வாழை, 750, ரஸ்தாலி, 600, ரோபஸ்டா, 350, மொந்தன் குறைந்தபட்சம், 200 அதிகபட்சம், 400 ரூபாய்க்கு ஏலம் போனது. ஐயப்பன் கோவில் சீசன் இருப்பதால், நேந்திரன் வாழைக்காய் விலை உயர்வாகவே உள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.