ஏழு கண்டங்களிலும் உயர்ந்த சிகரங்களை தொட்ட 17 வயது காம்யா: குவிகிறது பாராட்டு மழை!

3

புதுடில்லி: இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி காம்யா கார்த்திகேயன், ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட இளம் பெண் என்ற பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார்.


மும்பையில் உள்ள இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார் காம்யா கார்த்திகேயன். இவருக்கு வயது 17. கடந்த டிசம்பர் 24ம் தேதி, அண்டார்டிகாவின் வின்சன் மலையை, காம்யா ஏறி சாதனை படைத்தார். ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட இளம் பெண் என்ற பெயரை, காம்யா பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது மலையேறுவதில் ஒரு மதிப்புமிக்க சாதனையாகும்.


இந்திய கடற்படையின் கமாண்டர் மற்றும் தந்தை உடன் இணைந்து, காம்யா 16,050 அடி அண்டார்டிக் சிகரத்தை அடைந்து, உலகளாவிய சாதனையை படைத்தார். மலை ஏறும் பயணத்தை, தனது 13 வயதில் துவக்கினார் காம்யா. அவர் ஆப்ரிக்காவில் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவில் எல்ப்ரஸ் மலை, ஆஸ்திரேலியாவில் கொஸ்கியுஸ்கோ மலை, தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா, வட அமெரிக்காவில் தெனாலி, ஆசியாவில் எவரெஸ்ட் சிகரம், இறுதியாக, அண்டார்டிகாவில் வின்சன் மலையை ஏறி சாதனை படைத்தார்.


காம்யா, அவரது தந்தையை இந்திய கடற்படை அதிகாரிகள் பாராட்டினர். 'இது இந்தியாவிற்கும், கடற்படைக்கும் பெருமையான தருணம்' என்று இந்திய கடற்படை பெருமிதம் தெரிவித்து உள்ளது. சாதனை குறித்து, காம்யா கூறியதாவது: ஒவ்வொரு சிகரமும் எனக்கு தைரியம், சகிப்புத்தன்மை பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. எனது பயணம் மற்றவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தைத் தொடர ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.


இது குறித்து, 'தடைகளைத் தகர்த்தெறிந்து புதிய உயரங்களை அடைவோம். காம்யா கார்த்திகேயன், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களைத் தொட்ட, உலகின் மிக இளைய பெண்மணி என்ற சாதனையை பெற்றுள்ளார். இது மும்பைக்கு மகத்தான பெருமையின் தருணம்' என காம்யா படிக்கும் இந்திய கடற்படை பள்ளி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement