உ.பி., ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஹோட்டலில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நட்சத்திர ஹோட்டல்களிலும், அரண்மனை ஹோட்டல்களிலும் தங்கி புத்தாண்டை கொண்டாட பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த குடும்பத்தினர், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ, லக்னோவுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் லக்னோவில் நாகா பகுதியில் அமைந்துள்ள ஷரன்ஜீத் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.,01) அவர்களில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை ஹோட்டல் ஊழியர்கள் பார்த்தனர். சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன சம்பவம், எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இறந்த பெண்ணின் மகன் அர்ஷாத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர்கள் அலியா,9, அலிஷியா,19, அக்சா,16, ரஹ்மான், 18, மற்றும் அவர்களது தாய் அஸ்மா என்பது தெரியவந்துள்ளது. கொலைக்கான பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.