ரூ.17 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; 10 பேர் கைது: ரூ.5 கோடி சொத்து முடக்கம்
சென்னை : மெத்தா பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, சென்னையில், 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, 17 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களது வீடு, வாகனங்கள் உள்ளிட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருளான மெத்தா பெட்டமைன் கடத்தல் வழக்கில், மாதவரத்தை சேர்ந்த வெங்கடேசன், கார்த்திக் என்ற இருவரை, கடந்த மாதம், 21ம் தேதி, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.5 கிலோ மெத்தா பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், வெங்கடேசன், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். ஏழு ஆண்டு தண்டனையை அனுபவித்த நிலையில், 2021ல் விடுதலையானது தெரியவந்தது.
பின், உறவினர்களான கொடுங்கையூர் பிரபு, ஊரப்பாக்கம் சண்முகம் ஆகியோருடன் இணைந்து, மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக, மெத்தா பெட்டமைன் தயாரிக்கும் மூலப்பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து, போதைப்பொருள் தயாரித்து விற்றதும் கண்டறியப்பட்டது.
வெங்கடேசன் கொடுத்த தகவலில், கடந்த மாதம், 30ம் தேதி வடகரையில், 16 கிலோ மெத்தா பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது, லாரன்ஸ் ஆகியோரிடமிருந்து நேற்று, 128 கிராம் மெத்தா பெட்டமைன் பறிமுதலானது.
போதைப்பொருட்கள் விற்றதில் கிடைத்த பணத்தில், இந்த கும்பலை சேர்ந்தவர்கள், நான்கு வீடு, சொந்தமாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வாங்கியுள்ளனர்.
இவ்வழக்கில் மொத்தம், 10 பேர் கைது செய்யப்பட்டு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான, 17.815 கிலோ மெத்தா பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களின், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரித்தும் வருகின்றனர்.