காட்டுப் பன்றிகளை ஒழிக்க விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும்

மேட்டுப்பாளையம்; விவசாய பயிர்களை அதிகம் சேதம் செய்து வரும், காட்டுப்பன்றிகளுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும் என, ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஓரத்தில் உள்ள, விவசாய நிலங்களில், யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், மயில்கள் ஆகியவை புகுந்து, பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில் யானைகள் மனிதர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் மனிதர்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காண காரமடை ஒன்றியத்தில், 15 கிராமங்களில், வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்றும் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து, விவசாயிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர்.

கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் யானைகளை விட காட்டுப் பன்றிகள் தான் விவசாய பயிர்களை அதிக அளவில் சேதம் செய்து வருகிறது. நடவு செய்த வாழை சிறிதளவு வளர்ந்தவுடன், காட்டுப் பன்றிகள் வாழையை தோண்டி கிழங்கை சாப்பிடுவதால், மொத்தமாக வாழை விவசாயம் அழிந்து விடுகிறது.

வாழையின் குருத்துகளை மான்கள் சாப்பிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே காட்டுப்பன்றிகளை ஒழிக்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் பேசுகையில், 'கேரள மாநிலத்தில், காட்டுப்பன்றிகளை விவசாயிகள் கொல்வதற்கு, கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதே போன்று தமிழகத்திலும், விவசாய நிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளை கொல்வதற்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விவசாய விளை நிலங்களுக்கு காட்டுப்பன்றிகளும், யானைகளும் வருவதை, வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, நடைபெற உள்ள, காட்டு பன்றிகள் ஒழிப்பு மாநாடுக்கு விவசாயிகள் ஒன்றிணைந்து வர வேண்டும்,' என்றார்.

Advertisement