வெண்கலம் வென்றார் வைஷாலி * உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில்...

நியூயார்க்: உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை வைஷாலி, வெண்கலம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.
அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் வைஷாலி (தமிழகம்), 9.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' முறையிலான காலிறுதிக்கு முன்னேறினார்.
இதில் சீனாவின் ஜு ஜினெர் மோதினர். தலா 3 நிமிடம் கொண்ட முதல் போட்டியில் வைஷாலி தோற்றார். அடுத்த போட்டியில் வெற்றி பெற்ற இவர், 3வது போட்டியை 'டிரா' செய்ய, ஸ்கோர் 1.5-1.5 என சமனில் இருந்தது. நான்காவது போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றார்.
முடிவில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் மற்றொரு சீன வீராங்கனை ஜு வென்ஜுனை சந்தித்தார். முதல் போட்டியில் 'டிரா' செய்த வைஷாலி, அடுத்த இரு போட்டியில் சறுக்கினார். இதையடுத்து 0.5-2.5 என தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார். சீனாவின் ஜு வென்ஜுன் கோப்பை வென்றார்.
கார்ல்சன் அபாரம்
ஆண்களுக்கான 'பிளிட்ஸ்' பிரிவு பைனலில் நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் நெபோம்னியாட்சி மோதினர். இப்போட்டி 3.5-3.5 என சமனில் முடிந்தது. இதையடுத்து இருவரும் கோப்பை பகிர்ந்து கொள்ள சம்மதித்தனர். உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக, கார்ல்சன், நெபோம்னியாட்சி என இருவர் சாம்பியன் ஆகினர்.

ஆனந்த் பாராட்டு
சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர், இந்தியாவின் ஆனந்த் கூறுகையில்,''கடந்த 2021 முதல் இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலக 'ரேபிட்' தொடரில் ஹம்பி சாம்பியன் ஆனார். 'பிளிட்ஸ்' தகுதிச்சுற்றில் வைஷாலி சிறப்பாக செயல்பட்டார். அடுத்து வெண்கலம் வென்றது மகிழ்ச்சி,'' என்றார்.

Advertisement