'வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே ஓட்டளிக்கும் முறையை உறுதி செய்யாது'
புதுடில்லி : “வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே, ஒருவர் ஓட்டளிக்கும் முறையை உறுதி செய்யாது; சம்பந்தப்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது அவசியம்,” என, டில்லி தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் டில்லி தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்தந்த பூத் அலுவலர்களால், கடந்த ஆக., - அக்., வரையிலான காலகட்டத்தில் வாக்காளர்களை சேர்க்கும் பணியும், பட்டியலில் இல்லாத நபர்களை நீக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரும் 6ம் தேதி புதிய பட்டியல் வெளியாக உள்ளது.
இது குறித்து டில்லி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
கடந்த அக்., 29ல் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாதவர்களை சேர்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயரை நீக்கவும், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, ஓட்டளிக்கும் முறை உறுதி செய்யப்படாது. வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இடம்பெற்றிருத்தல் அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.