'ஜீனியஸ்' நிதிஷ் குமார் * ஆஸி., முன்னாள் கேப்டன் பாராட்டு

சிட்னி: ''சிட்னி டெஸ்டில் நிதிஷ் குமாரை பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறக்க வேண்டும்,'' என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 'ஆல் ரவுண்டர்' நிதிஷ் குமார் 21. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மெல்போர்னில் சதம் விளாசிய நிதிஷ் குமார், முதல் 4 டெஸ்டில் 294 ரன் எடுத்து, 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இத்தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர்களில் ஹெட் (410, ஆஸி.,), ஜெய்வாலுக்கு (359, இந்தியா) அடுத்து உள்ளார்.
இவர் குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 43, கூறியது:
இந்திய அணிக்காக 8வது இடத்தில் பேட்டிங் செய்யும், இளம் நிதிஷ் குமார், ஒரு 'ஜீனியஸ்' வீரர். இவரை 6வது அல்லது 7 வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்க வேண்டும். 21 வயதில், அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது நம்ப முடியாதது. ஒட்டுமொத்த தொடரில் இவரை, எல்லோரும் குறைத்து மதிப்பிட்டு விட்டனர்.
ஆஸ்திரேலியாவின் எந்த பவுலரைக் கண்டும் பயப்படாத இவர், அனைவரையும் கவர்ந்து விட்டார். அணிக்கு தேவையான நேரத்தில் நிதானமான, பொறுமையான ஆட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். 'டெயிலெண்டர்' வீரர்களுடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்கிறார்.
பேட்டிங் மட்டுமன்றி, பவுலிங், பீல்டிங் என மூன்று பிரிவிலும் அசத்துகிறார். இந்திய கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு நிதிஷ் குமார். கடைசி டெஸ்டில் இவர், முன்னதாக களமிறங்க வாய்ப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement