தொடரும் தோல்வி... சிக்கலில் காம்பிர் * நாளை ஐந்தாவது டெஸ்ட் துவக்கம்
சிட்னி: இந்திய அணியின் தொடர் தோல்விகளால் அணியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை ஐந்தாவது டெஸ்ட் துவங்க உள்ள நிலையில், பயிற்சியாளர் காம்பிர், துணை பயிற்சியாளர்கள் செயல்பாடு மீது, கவனம் திரும்பியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. அடிலெய்டு, மெல்போர்னில் தோற்க (பிரிஸ்பேன் டெஸ்ட் 'டிரா') தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது.
தேர்வு குழப்பம்
பயிற்சியாளர் காம்பிர் தலைமையிலான குழுவினர், ஆஸ்திரேலிய அணியின் வலிமையான பவுலிங் தாக்குதலை சமாளிக்கும் வகையில், சரியான இந்திய 'லெவன்' அணியை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.
ஏற்கனவே, இலங்கை ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா, சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை தக்க வைக்கவும், சிட்னி டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
காரணம் என்ன
ஆனால், மைதானத்தில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, களத்துக்கு வெளியில் அணிக்குள் சில குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. ரவி சாஸ்திரி, டிராவிட் பயிற்சியாளர்களாக இருந்தது போல இல்லாமல், தற்போது வீரர்கள் 'டிரசிங் ரூமில்' ஒருவருக்கு ஒருவர் சரியாக பேசிக் கொள்வது இல்லை.
கேப்டன் ரோகித் சர்மா, அணித் தேர்வு குறித்து வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுகிறார். ஆனால், கடந்த ஜூலை மாதம் காம்பிர் பொறுப்பேற்ற பின், ஜூனியர் அல்லாத வீரர்கள், சில நேரங்களில் அணியில் இருந்து ஏன் நீக்கப்படுகின்றனர் என்ற விபரம், ரோகித்திடம் தெரிவிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
ரோகித்தின் மோசமான பார்மும், அவருக்கு எதிராக உள்ளது. அணியின் உறுதியான நபர் என கருதப்படும் காம்பிர், ரோகித், கோலி போன்ற வீரர்களின் நம்பிக்கையை பெறவில்லை எனத் தெரிகிறது. தவிர, ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா வேண்டும் என்ற காம்பிர் கோரிக்கையை, தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஏற்க மறுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாக ஒருவர் கூறுகையில்,'' சிட்னி டெஸ்ட், அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் காம்பிரின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கல் ஏற்படும்,'' என்றார்.
வீரர்களுக்கு எச்சரிக்கை
மெல்போர்ன் தோல்விக்குப் பின் 'டிரசிங் ரூமில்' பயிற்சியாளர் காம்பிர், வீரர்களை எச்சரித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ''சூழ்நிலைக்கு ஏற்ப யாரும் விளையாடவில்லை. தங்களது வழக்கமான ஆட்டத்தை விளையாடி, அணியின் திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர். கடந்த ஆறுமாதம் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தேன். இனிமேல் போட்டியின் திட்டப்படி தான் விளையாட வேண்டும். இதை ஏற்க மறுத்தால் நீக்கப்படுவீர்கள்,'' என எச்சரித்துள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு
புத்தாண்டு தினமான நேற்று, சிட்னியில் உள்ள 'கிரிப்ளி ஹவுசில்' ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்தார். அப்போது இத்தொடரில் 4 டெஸ்டில் 30 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பாராட்டினார். அப்போது அவர்,' ஆஸ்திரேலியாவில் பும்ரா, இடது கையில் தான் பவுலிங் செய்ய வேண்டும் அல்லது ஒரு கிரீசிற்கு முன்னதாக 'ஸ்டெப்' குறைவாக வந்து பந்துவீச வேண்டும் என சட்டம் இயற்றலாம்,' என நகைச்சுவையாக தெரிவித்தார்.