காது கேளாத குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
சென்னை: 'பிறவியிலேயே காது கேளாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவச, 'காக்ளியர் இம்ப்ளான்ட்' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிறவியிலேயே காது கேளாமை பாதிப்பானது, 1,000 குழந்தைகளில், ஏழு குழந்தைகளுக்கு உள்ளது. இவை பிறக்கும் போதே கண்டறியப்படாமல் இருந்தால், நிரந்தரமாக பாதிக்கப்படுவதுடன், ஒலி உலகத்தை அனுபவிக்கும் திறனும் இல்லாமல் போகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, அதி நவீன கருவிகளை பயன்படுத்தி, புதிதாக பிறந்த, 3.1 லட்சம் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.
அதில், 406 குழந்தைகளுக்கு குறைபாடு கண்டறியப்பட்டது; உடன், 205 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என்ற, காக்ளியர் உள்வைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும், 170 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த மாதம், 31 குழந்தைகளுக்கு, அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில், 6.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த சிகிச்சையானது, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.