இதே நாளில் அன்று
டிசம்பர் 30, 1973
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் ரெபாலியில், ராமலிங்க சர்மா - வெங்கட லட்சுமம்பா தம்பதியின் மகனாக, 1904 மார்ச் 28ல் பிறந்தவர், உப்பிலதடியம் நாகையா சர்மா எனும், வி.நாகையா.
இவர், திருப்பதி தேவஸ்தான உதவித் தொகையுடன் பட்டப்படிப்பு முடித்து, குமாஸ்தாவாக பணியாற்றினார். சித்துாரில் பத்திரிகையாளராகவும், ராம விலாச சபாவில் நாடக நடிகராகவும் வளர்ந்தார். சீனிவாச அய்யங்கார் மற்றும் தீரர் சத்தியமூர்த்தியின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அசாமின் கவுஹாத்தி மாநாட்டில், தேசபக்தி பாடல்களை பாடி, காந்தி, நேருவால் ஈர்க்கப்பட்டார்.
காந்தியின் தண்டி யாத்திரையில் பங்கேற்றார். தன் மனைவியின் திடீர் மறைவுக்கு பின், திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் தங்கி, ஆன்மிக பணியில் ஈடுபட்டார். இவரது நண்பர், கிருஹலட்சுமி என்ற திரைப்படத்துக்கு இசையமைக்க அழைத்தார்.
பின், அசோக்குமார், மீரா, நவஜீவனம், என் வீடு, இரு துருவம், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழடைந்தார். இசையமைப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளையும் வெளிக்காட்டிய இவர், தன், 69வது வயதில், 1973ல் இதே நாளில் மறைந்தார்.
'பத்மஸ்ரீ' விருது பெற்ற, முதல் தென் மாநில நடிகர் மறைந்த தினம் இன்று!