மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு ஜன.14-ல் மகர ஜோதி

சபரிமலை: விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும்.

மண்டல கால பூஜை முடிந்து டிச.26- இரவு 10:00 -மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. கூடுதல் பக்தர்கள் வருவர்என்பதை கருத்தில் கொண்டு கூடுதல்அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடை திறப்பு



இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.

ஜன., 14-ல் மகர ஜோதி பெருவிழா நடைபெறுகிறது.

Advertisement