இடிந்து விழும் நிலையில் அரூர் சார்பதிவாளர் அலுவலகம்
அரூர், ஜன. 2-
தர்மபுரி மாவட்டம், அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, சிக்களூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, ஏ.கே.தண்டா, வள்ளி மதுரை, மாம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, வாச்சாத்தி என எல்லை பரந்து விரிந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் கிரயம், புரிந்துணர்வு ஒப்பந்தம், உயில், திருமண பதிவு, செட்டில்மெண்ட் உள்ளிட்டவைகளை அரூர் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே மேற்கொள்ள வேண்டும். தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், ஆங்காங்கு பெயர்ந்து இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் கட்டடத்தின் பக்கவாட்டு முகப்பு பகுதி உட்பட சுவர்கள் சேதமடைந்துள்ளன. மழை பெய்தால் அலுவலகத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் உள்ளது. கட்டட சேதத்தால் ஆவணங்களை பத்திரப்படுத்துவதிலும் ஊழியர்களுக்கு சிரமம் உள்ளது.
குடிநீர், கழிப்பறை வசதியும் இல்லை. எனவே சேதமடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு, புதிதாக கட்ட பதிவுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.