காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வேகத்தடையின் உயரம் குறைக்க எதிர்பார்ப்பு
வேகத்தடையின் உயரம் குறைக்க எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூ பிரதான சாலையில், தனியார் மருத்துவமனை, பள்ளி அமைந்துள்ள பகுதியில் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க, இரு இடங்களில் வேகத்தடை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறிய சக்கரம் கொண்ட இருசக்கர வாகனங்கள் வேகத்தடையை கடக்கும்போது, வாகனத்தின் அடிப்பாக்கம் வேகத்தடையில் உரசுகிறது. மேலும், வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வேகத்தடையின் உயரத்தை குறைத்து, வெள்ளைநிற வர்ணம் பூச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.குணசேகரன், காஞ்சிபுரம்.
காஞ்சி பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., வசதி அமையுமா?
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். ஏராளமான பயணியர் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், ஏ.டி.எம்., வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், பயணியர் பணம் எடுக்க பேருந்து நிலையத்திற்கு வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும்போது நேரம் விரயம் ஏற்பட்டு, பேருந்தை தவறவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.எஸ்.அறிவழகன், திருப்புலிவனம்.
சாய்ந்த மின் கம்பம் விவசாயிகள் அச்சம்
காஞ்சிபுரம் அடுத்த சாமந்திபுரம் - வரதாபுரம் கிராமம் இடையே, மின் வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடத்திற்கு செல்லும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
இதனால், வயல்வெளியில் ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்லும் கால்நடை பராமரிப்போர், வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.