போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய விஜயேந்திரர்
காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் சமய சமுதாய கலை, கலாசார, பண்பாட்டு சேவை அமைப்பான ஹிந்து சமய மன்றம் மற்றும் காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியருக்கான பாவை விழா போட்டிகள், நேற்று முன்தினம் சங்கரா கல்லுாரியில் நடந்தது.
பாட்டு, ஓவியம், மாறுவேடம், கோலம், பாரம்பரிய உணவு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பல்வேறு பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்லுாரி உதவி பேராசிரியர்கள், முனைவர்கள், ஆய்வாளர்களுக்கான பக்தி நெறி பயிலரங்க நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சமய நெறி, பன்னிரு திருமுறை வரலாறு, திருவெம்பாவையும், வழிபாட்டு மரபும், சந்தமிகு தமிழ்மறை, அபங்க நாம ஸங்கீர்த்தனம், வழிவந்த பக்திநெறி உள்ளிட்ட தலைப்புகளில், முனைவர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர்.
பாவை விழா போட்டியில் வெற்றி வெற்ற மாணவ- - மாணவியருக்கு, நேற்று இரவு சங்கரமடத்தில் நடந்த விழாவில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் பரிசு, சான்றிதழ் வழங்கி அருளுரையாற்றினார்.
இவ்விழாவில், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச ஐயர், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.