சாமியார் மலையில் சுவாமி தரிசனத்துக்கு திரண்ட மக்கள்-
பந்தலுார், ; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி சாமியார் மலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து புத்தாண்டை கொண்டாடினர்.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் பிரசித்தி பெற்ற சாமியார்மலை அமைந்துள்ளது. சாலை பகுதியில் இருந்து, 3 கி.மீ., உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில், சிவபெருமான், முருகன், அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் புத்தாண்டு நாளில் இங்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா நடத்தப்படும்.
நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில், சுவாமி ஓம்காரனந்தா, அர்ச்சகர் பரமசிவம் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து, பூஜைகள் செய்து, வழிபட்டனர். கோவில் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
அதில், சுவாமிகள் வேதாம் ருதானந்தாபுரி, ஹம்சானந்தாபுரி, சாந்தானந்தாசரஸ்வதி, தர்மஜெயாதன்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினர்.
அதில், 'ஹிந்து மதம் மற்றும் தினசரி இறைவனை வழிபட வேண்டியதன் அவசியம்; இறை வழிபாடு மறந்து போவதால் ஏற்படும் பாதிப்புகள்,' குறித்து பேசினர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் தலைமையில், நிர்வாகிகள் மோகன்தாஸ், சுப்ரமணியம், ரவீந்திரகுமார், மனோஜ்குமார், சிவஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வனத்துறையினர்; போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.