வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை கல்வெட்டு சேதம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் எனப்படும் குடவோலை முறை கல்வெட்டு கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன், முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்தை சேர்ந்த, குடவோலை தேர்தல் முறையை பற்றி விளக்கும் கல்வெட்டு உள்ளது.
இங்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து, தினமும் 1,000 மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தற்போது, கல்வெட்டுகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து உள்ளது. இதை பழமை மாறாமல் சீரமைக்க, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மேலும், இக்கோவில் வளாகத்தில் முறையாக மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், மழை நேரங்களில் கோவில் வளாகத்தில், மழைநீர் குளம்போல் காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், மழைநீரில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, குடவோலை முறை கோவில் கல்வெட்டுகளை சீரமைத்து, மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.