சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ராணுவ அமைச்சகம் அறிவிப்பு

புதுடில்லி: தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் வகையில், 2025ம் ஆண்டை, சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு, ராணுவ அமைச்சகத்தின் அனைத்து செயலர்களுடன், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், ராணுவ துறையில் தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களின் தேவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இவற்றை வேகப்படுத்தும் வகையில், 2025ம் ஆண்டை, ராணுவ சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும், முப்படைகளும் போருக்கு தயாராக இருக்கும் வகையில், தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுஉள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சைபர் மற்றும் விண்வெளி போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஹைப்பர்சோனிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும்.

தியேட்டர் எனப்படும் மூன்று படைகளும் ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளை உருவாக்குவது தொடர்பான முயற்சிகளும் இந்தாண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

கொள்முதல் நடைமுறைகளை எளிமையாக்குவது, விரைவுபடுத்துவது உள்ளிட்டவற்றிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் பயணத்தில், சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ஒரு முக்கிய படியாக இருக்கும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement