ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை
உடுமலை, ;உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மக்கள், இக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.
கால்நடைகளுக்கென பிரத்யேக கோவில் எனப்படும் இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும்.
மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தது. இப்பூஜையில், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, ரேக்ளா வண்டிகளில் விவசாயிகள் வந்தனர்.பின்னர், ரேக்ளா காளைகளுக்கு, கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விவசாயிகள் கூறுகையில், 'ரேக்ளா வண்டிகளில், காளைகளை பூட்டி பழக்கி வருகிறோம். பொங்கல் பண்டிகையின் போது, ரேக்ளா வண்டிகளில், கோவிலுக்கு செல்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். தற்போது ரேக்ளா வண்டி ஓட்ட பழக்கி வரும் காளைகளை அழைத்து வந்து, அவை நலத்துடன் வாழ, ஆல்கொண்டமால் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துகிறோம்,' என்றனர்.