தேவாலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தேவாலயங்களில்,ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு புனித லுார்து அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அருட்தந்தை ஜேக்கப் அடிகளார், திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஆசி வழங்கினார்.
இந்த சிறப்பு ஆராதனை வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்களும், மற்ற மதத்தினரும் பங்கேற்று, புத்தாண்டு சிறப்பு ஆராதனை வழிபாட்டில் ஈடுபட்டனர். இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டனர்.
* கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., சர்ச்சில், சபை குரு சார்லஸ் தேவனேசன் தலைமையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, பாடல்கள் பாடி புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், நள்ளிரவு 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழக்கி ஒருவருக்கொருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
* வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயம், துாய இருதய ஆலயம், புனித லுாக்கா ஆலயம், ரொட்டிக்கடை புனிதவனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.