பிள்ளையார்பட்டியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பிள்ளையார்பட்டி:ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து சுவாமிக்கு திருவனந்தல், தனுர் மாத பூஜை நடந்தது.

தொடர்ந்து தங்கக் கவசத்தில் அருள்பாலித்த மூலவரையும், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய உற்ஸவரையும் பக்தர்கள் தரிசிக்கத் துவங்கினர். அதிகாலை 4:00 மணி முதல் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.

காலை 10:30 மணியளவில் பொதுதரிசனத்திற்கு குளத்தைச்சுற்றிலும் வரிசையாக பக்தர்கள் நின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து தரிசித்தனர். வரிசையில் சென்ற சிலர் மயக்கமடைந்த நிலையில் அவர்களை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பினர்.

சிறப்பு தரிசன வரிசையிலும் நீண்ட கூட்டம் இருந்தது. பக்தர்கள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் திருப்புத்துார் ரோட்டில் ந.வைரவன்பட்டி வரை போக்குவரத்து நெருக்கடி இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக ரோட்டின் இருபுறமும் கார்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டதால் மதியம் 2:00 மணிவரை இந்த சிக்கல் நீடித்தது.

கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினர் மருத்துவ பணிகளை செய்தனர். புறக்காவல்நிலையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement