உள்நாட்டு விமானங்களில் 'வைபை' ஏர் இந்தியா அறிமுகம் செய்தது
புதுடில்லி:உள்நாட்டு விமானங்களில் 'வைபை' வசதியை வழங்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை, ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த ஜூலையில் விஸ்தாரா நிறுவனம், அதன் சர்வதேச விமானங்களில் வைபை இணைய சேவையை வழங்கத் துவங்கியது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் இயக்கப்படும் 'ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9, ஏர்பஸ் ஏ321 நியோ' ஆகிய விமானங்களில், வைபை இணைய சேவை வசதி துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில், இந்திய வான்வெளியில் இருந்து 10,000 அடிக்கு மேல் பறக்கும் விமானங்களில், பயணியரின் மொபைல் போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களுக்கு வைபை வாயிலாக இணைய வசதி வழங்க, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இந்திய நிறுவனமாக ஏர் இந்தியா, உள்நாட்டு விமானங்களில் வைபை சேவையை வழங்கத் துவங்கி உள்ளது.