மலிவான அரசியல் செய்வதாக ஆதிஷிக்கு கவர்னர் கண்டனம்
புதுடில்லி : டில்லியில், மத வழிபாட்டு தலங்களை இடிக்க, கவர்னர் அலுவலகம் உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய முதல்வர் ஆதிஷிக்கு கண்டனம் தெரிவித்த துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, அவர் மலிவான அரசியல் செய்வதாக விமர்சித்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, டில்லியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு, டில்லி முதல்வர் ஆதிஷி சமீபத்தில் எழுதிய கடிதத்தில், 'நவ., 22ல் உங்களது தலைமையின் கீழ் மத கமிட்டியின் கூட்டம் நடந்தது.
'இதில், டில்லியின் மேற்கு படேல் நகர், தில்ஷாத் கார்டன், சுந்தர் நாக்ரி, சீமா புரி, உஸ்மான்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
'இந்த பகுதிகளில், ஹிந்து கோவில்கள், புத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த முடிவை கைவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் ஆதிஷி மலிவான அரசியலில் ஈடுபடுகிறார். மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
'அத்தகைய கோப்பு எதுவும் அலுவலகத்திற்கு வரவில்லை. மத வழிபாட்டுத் தலங்களில், கூடுதலாக பாதுகாப்பை அதிகரிக்கும்படியே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது' என, தெரிவித்திருந்தார்.