பிரதமர் மோடியின் படத்துடன் 'லிங்க்' வந்தால் தொட வேண்டாம்; சைபர் கிரைம் குற்றவாளிகளின் அடுத்த மோசடி
சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி படத்துடன் பா.ஜ., அனுப்பியது போல், 'லிங்க்' அனுப்பி, '675 மற்றும் 5,000 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க இங்கே, 'கிளிக்' செய்யவும்' என வந்தால் ஜாக்கிரதை; உங்கள் வங்கி கணக்கில் இருந்து, மர்ம நபர்கள், மொத்த பணத்தையும் சுருட்டி விடுவர்.
நாளுக்குள் நாள் சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. போனில் பேசி நம் வங்கி கணக்கு விபரங்களை பெற்று பணம் திருடிய கும்பல், தற்போது தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை, 'அப்டேட்' செய்து, விதவிதமாக மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
பணம் திருட்டு
குறிப்பாக வாழ்த்து கடிதம் போல் நம், 'வாட்ஸாப்' எண்ணிற்கு பி.டி.எப்.பைல் அனுப்பி அதன்மூலம் வங்கி கணக்கில் நுழைந்து பணத்தை திருடுகின்றனர். வங்கியில் இருந்து, 'நோ யுவர் கஸ்டமர்' தகவல், 'அப்டேட்' செய்ய வேண்டும் எனக் கூறி, பைல் அனுப்பி மோசடி செய்கின்றனர்.
அமேசான், பிளிப்கார்டில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக கூறி, 'லிங்க்' அனுப்பி பணத்தை சுருட்டுகின்றனர். இதுகுறித்து மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு இருப்பதாலும், போலீசாரின் தொடர் எச்சரிக்கையாலும் தற்போது சைபர் கிரைம் குற்றவாளிகள், புதிதாக ஒரு மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்' போன்ற சமூகவலை தளத்தில் பிரதமர் படத்துடன், பா.ஜ., வெளியிட்டது போல் போலியாக ஒரு விளம்பர ஸ்டில்லை, 'லிங்க்' வசதியுடன், 'அப்டேட்' செய்துள்ளனர்.
அதில், பாரத் ஜன் தன்யோஜனா மூலம் ஒவ்வொரு பொதுமக்களுக்கும், 5,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க 'ஸ்கிராட்ச்' செய்யவும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோல் பா.ஜ.,வில் இருந்து 5,000 ரூபாய் கிடைக்க இங்கே, 'கிளிக்' செய்யவும் என, 'லிங்க்' கொடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு இல்லாதவர்கள் அதன் வழியாக, 'கிளிக்' செய்யும்போது, நம் வங்கி விபரங்களை பெற்று, பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகின்றனர். இப்படி தமிழகம் முழுதும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருகின்றனர்.
மோசடி கும்பல்
போலீசார் கூறியதாவது:
அவர்கள் அனுப்பும், 'லிங்க்'கை தெரிந்தோ தெரியாமலோ நாம் தொட்டுவிட்டால், நம் வங்கி கணக்கு மற்றும் அலைபேசியில் உள்ள விபரங்கள் அனைத்தும், இணைய வழி மோசடி கும்பலிடம் சென்று விடும்.
அதுபோல் முன்பின் தெரியாத வெளிநாட்டு அழைப்பை ஏற்கக்கூடாது. அதில் உங்களது அலைபேசி எண், 'வெரிபிகேஷன்' என தகவல் தெரிவிப்பர். 'ஓகே' செய்ய ஒரு எண்ணை அழுத்தச் சொல்வர்.
அழுத்தினால் நம் விபரங்கள் அவர்களிடம் சென்றுவிடும். சைபர் குற்றங்கள் குறித்து இலவச எண்ணான, 1930க்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- நமது நிருபர் -