ரூ.16 கோடி மதிப்பீடில் தி.நகரில் மேல்நிலை தொட்டி

தி.நகர்: சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 141வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட செயலரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்வில், 133வது வார்டு கவுன்சிலரும் மேற்கு பகுதி செயலருமான ஏழுமலை, 141வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன், 141வது வட்ட செயலர் என்.துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசுகையில், ''கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, பெரிய குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 'மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்' என, மறைந்த முன்னாள் மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் சட்டசபையில் பேசியிருந்தார்.

''அவர் கனவு நனவாகும் வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீடில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவுள்ளது. என் பத்தாண்டு கோரிக்கையை ஏற்று, 131 கோடி ரூபாய் மதிப்பில் தி.நகரில் மேம்பாலம் கட்ட முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கி உள்ளார்,'' என்றார்.

தொடர்ந்து, 141வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன் பேசுகையில், ''தி.நகரில் கழிவுநீர் மற்றும் குடிநீர் பணிகள் இன்னும் சில மாதங்களில் 95 சதவீதம் முடிந்து விடும்,'' என்றார்.

Advertisement