மந்த கதியில் ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்தும் பணி படகு சவாரி துவங்குவது எப்போது?


ஓசூர், ஜன. 2-
ஓசூர் ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்தும் பணி மந்த கதியில் நடக்கிறது. அதனால், படகு சவாரி துவங்குவது காலதாமதமாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் மையப்பகுதியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. நகரின் நிலத்தடி நீர்மட்டத்திற்கு உதவியாக உள்ள இந்த ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, ஏரியில் படகு சவாரி விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, உலக வங்கியிடம் இருந்து, 23.41 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டு, கடந்த, 2020 ல், அ.தி.மு.க., ஆட்சியில் இப்பணி துவங்கப்பட்டது.
ஏரிக்குள், 5 இடங்களில் ஐ லேண்ட் போன்ற குட்டி தீவுகள் ஏற்படுத்தி, அங்கு படகு சவாரி செல்லும் மக்கள் அமர இருக்கைகள், கடைகள் மற்றும் ஏரிக்கரையில் நிழற்கூடையுடன் நடைபாதை, வியூ பாயிண்ட், கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஏரிக்கரையில் நடைப்பாதை பணிகள் மட்டுமே முழுமை பெற்றுள்ளன. ஆனால் ஐ லேண்ட், படகு சவாரி விடுவதற்கான பணிகள், வியூ பாயிண்ட், கழிவறைகள் போன்ற எந்த பணியும் முழுமை பெறவில்லை. இதுமட்டுமின்றி, ராமநாயக்கன் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள அந்திவாடி, கர்னுார், கல்கேரி ஏரிகளை துார்வார, 10.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் பாதியளவு கூட முடியவில்லை.
மொத்தம், 33.97 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் இப்பணிகள், 4 ஆண்டுகளை கடந்த போதும் கூட, 50 சதவீதம் கூட முடியவில்லை. ராமநாயக்கன் ஏரி கடந்த, 2022 ல், 20 ஆண்டுக்கு பின் நிரம்பியது. அந்த ஏரியில் தற்போது தண்ணீர் குறைவாக உள்ளது. ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. ஏரியை அழகுபடுத்துவதாக துவங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. ஐ லேண்டிற்காக ஏரிக்குள் மண்ணை கொட்டி மேடாக மாற்றியுள்ளனர். அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் முடியாததால், புதர் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில் துவங்கியுள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்காக, ராமநாயக்கன் ஏரி அருகே தினமும், 20.133 எம்.எல்.டி., கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரித்த தண்ணீரை ஏரியில் விட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏரியை அழகுபடுத்துவதாக கூறி விட்டு, பாதாள சாக்கடை கழிவு நீரை ஏரிக்குள் விடலாமா என, மக்கள்
மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.
ஓசூர் மக்களின் பொழுதுபோக்கிற்கு எந்த இடமும் இல்லாத நிலையில், படகு சவாரியை தான் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்தி, அதில் நீர் நிரப்பி படகு சவாரி விடும் திட்டம் காலதாமதமாகி வருகிறது. அரசின் பணம் வீணாகி வருவதாகவும், காலதாமத்தால் இத்திட்டத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து, கூடுதலாக கடனுதவி பெறும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளதாக கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement