காவேரிப்பட்டணத்தில் 10 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா
கிருஷ்ணகிரி, ஜன. 2-
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே மூடப்பட்டு, பயனற்ற நிலையில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,க்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் அம்பேத்கர் சமுதாய கூடம் உள்ளது. ஏழை, எளிய மக்கள், தங்களின் குடும்ப நிகழ்வுகளை நடத்துவதற்காக இந்த சமுதாய கூடம், கடந்த, 2013ல், டிச.,30ல் திறக்கப்பட்டு, சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பின் மூடப்பட்ட
சமுதாயகூடம் இதுவரை திறக்கப்படவில்லை.
கடந்த, 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடப்பட்டுள்ள சமுதாய கூடத்தின், கட்டடம் அருகில் புதர் மண்டியும், பூச்சு பெயர்ந்தும், விரிசல் விடும் நிலையில் உள்ளது.
இது குறித்து அப்
பகுதியினர் கூறுகையில், ''டவுன் பஞ்., துணை தலைவர் வீட்டின் எதிரில் இருந்தபோதும், மக்கள் இது குறித்து மனுக்கள் அளித்தும், டவுன் பஞ்., நிர்வாகம் இக்கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமுதாய கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.