பள்ளத்தில் சிக்கிய வாகனம் போக்குவரத்து பாதிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் இடையம்புதூர் கிராமத்தில் திருப்புலிவனம் -- சாலவாக்கம் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள், உத்திரமேரூர், வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இடையம்புதூர் சர்ச் அருகே உள்ள சாலை சேதமடைந்து, நடுவே ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 1:45 மணியளவில், திருப்புலிவனத்தில் இருந்து சாலவாக்கம் நோக்கி சென்ற மினி வேன் பள்ளத்தில் சிக்கியது.

பின், ஓட்டுநர் வாகனத்தை எடுக்க முயன்ற போது, சக்கரம் பள்ளத்தில் ஆழமாக புதைந்தது. அரை மணி நேரம் போராடி, வேறொரு வாகனத்தின் உதவியுடன், பள்ளத்தில் சிக்கிய வாகனம் மீட்கப்பட்டது.

இதனால், வாகன போக்குவரத்துக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது. இந்த சாலை பள்ளத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர், ஜல்லி மற்றும் மண் கொட்டி வைத்துள்ளனர். ஆனால், சேதமடைந்த சாலையை தற்போது வரை சீரமைக்கவில்லை. எனவே, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement