'ஆயுதமும், கேடயமும் புத்தகங்களே'
வைகைச்செல்வன்
சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சியில் நேற்று, 'இன்று ஒன்று நன்று' எனும் தலைப்பில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:
அறிவைப் பெருக்குவது புத்தகங்கள்தான். படிக்க படிக்க நாம் மாறிக்கொண்டே இருப்போம். நமக்குள் இருப்பவற்றை வெளியே கொண்டுவருவது புத்தகங்கள்தான்.
வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி அவசியம். முயற்சிக்கான வழியையும், அதற்கான நம்பிக்கையையும் தரவல்லது புத்தகங்கள்.
குழப்பமான சூழலில், புத்தகங்களை உதவிக்கு அழைக்க வேண்டும். மனிதர்களைப் போல, வரமாட்டேன் என புத்தகங்கள் கூறாது; வேறு காரணம் கூறி தப்பிக்காது.
விடுமுறையே எடுக்காமல் இயங்கி வரும் நம் இதயத்தின் துடிப்பை இ.சி.ஜி., மானிட்டரில் அளவிடும்போது, அது ஏற்றத் தாழ்வோடுதான் காணப்படும். அதுபோன்றதுதான் வாழ்க்கை. மேடு பள்ளங்கள் இருந்தால்தான் வாழ்க்கை துடிப்புடன் இருக்கும்.
வெற்றிக்கு புறவழிச் சாலை கிடையாது. நேர்வழி மட்டுமே உண்டு. இந்த நேர்வழியைப் பெற புத்தகங்களே ஆயுதங்களாகவும், கேடயமாகவும் பயன்படுகின்றன.
எந்தச் சூழலிலும், இக்கட்டிலும் உடைக்க முடியாத மன உறுதியைத் தரவல்லது புத்தகங்களே.
இவ்வாறு அவர் பேசினார்.