திடீர் சுற்றுலா தலமான வல்லுார் அணைக்கட்டு
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, சீமாவரத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், நேற்று, புத்தாண்டு தினத்தில், மீஞ்சூரை சுற்றியுள்ளவர்கள், அங்கு வந்து அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் குதுாகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள், அணைக்கட்டு சுவரில் இருந்து உள்ளே குதித்து, ஆபத்தான விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். குடும்பம், குடும்பமாக அங்கு பொதுமக்கள் கூடி, அணைக்கட்டில் இருந்து அருவிபோல் கொட்டிய, தண்ணீரில் ஆனந்தமாக குளித்து விளையாடினர்.
இளைஞர்கள் சிலர் அணைக்கட்டில் மேல்பகுதியில் நின்றபடி, 'செல்பி' எடுத்தும் 'ரிஸ்க்' எடுத்தனர். புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் கூடியதால், வல்லுார் அணைக்கட்டு, திடீர் சுற்றுலா தலமாக மாறியது.