'கருப்பு கவுனி' நெல் வளர்ப்பில் மீஞ்சூர் விவசாயிகள் ஆர்வம்

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா, சொர்ணவாரி பருவங்களில், 40,000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில், அதிகளவில் பாபட்லா, பொன்னி, எஸ்.எல்.ஆர், ரூபாலி, டி.கே.எம்., உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

சமீப காலமாக, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி என, பாரம்பரிய நெல் வகைகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக, 'கருப்பு கவுனி' நெல் விவசாயிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஐந்து அடி உயரத்திற்கு வளரும் இது மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதால், இதில் ஆர்வம் காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

'கருப்பு கவுனி' நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி, கருப்பு நிறமாக இருக்கும். இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த அரிசி குறித்து பொதுமக்களிடையே நல்ல விழிப்புணர்வும், வரவேற்பும் இருப்பதால், இதை வளர்க்கிறோம். எங்கள் வீட்டு தேவைக்கும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இதன் பயிர்காலம், மற்ற ரகங்களைவிட, 30 நாட்கள் கூடுதலாக இருக்கும். குறைவான மகசூல் கிடைக்கும். அதே சமயம், நல்ல விலை போகும். பாரம்பரிய நெல் ரகங்களை வளர்ப்பதில், விவசாயிகளிடையே வேளாண் துறை விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement