அற்புத குழந்தை இயேசு சர்ச் ஆண்டு பெருவிழா துவக்கம்
மணலிபுதுநகர்: சென்னை, மணலிபுதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் பிரசித்திப் பெற்றது. இங்கு, 45ம் ஆண்டு பெருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக, கோவில் வளாகத்தில் இருந்து, குழந்தை இயேசுவை தாங்கிய மாதா உருவம் பொறித்த திருக்கொடி, ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து, புனித நீர் தெளிக்கப்பட்டு, சாம்பிராணி துாபமிட, 60 அடி உயர கொடி மரத்தில், கொடியேற்றம் செய்யப்பட்டது.
பின், சென்னை - மயிலை மறைமாவட்டம் அருட்பணி. பீட்டர் தும்மா தலைமையில், 'எதிர்நோக்கின் திருப்பயணிகளாக - ஜூபிலி ஆண்டு - 2025' என்ற தலைப்பில் திருப்பலி நடந்தது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில், ஜன., 2ம் தேதி, ஆண்டின் முதல் வியாழன் - அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
தொடர்ந்து, ஜன., 4ம் தேதி மாலை, திருத்தேர் பவனி; 5ம் தேதி, ஆசிர்வாத பெருவிழாவும், அன்றிரவு, கொடியிறக்கமும் நடைபெறும். வடசென்னையில் அதிகம் மக்கள் கூடும் திருவிழாக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, பங்கு தந்தை தங்ககுமார் தலைமையிலான, பங்கு மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.