மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் 'பார்க்கிங்' இல்லாமல் பயணியர் அவதி
மேல்மருவத்துார்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், மேல்மருவத்துார் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ஒரத்தி, அனந்தமங்கலம், ராமாபுரம், செய்யூர், சூனாம்பேடு, சோத்துப்பாக்கம், கீழாமூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மக்கள், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இதனால், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர், ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள காலியான இடத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால், அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி, மர்ம நபர்களால் திருடப்படுகின்றன.
இதனால், மேல்மருவத்துார் காவல் நிலையம் சார்பாக, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வரும் மர்ம நபர்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி செல்கின்றனர்.
இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முடிந்துவிட்டது.
எனவே, ரயில்வே துறையினர், இருசக்கர வாகன நிறுத்தம் ஒப்பந்தம் அறிவித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.