தண்ணீரின்றி வறண்ட நெல்வயல்கள் நெடுமரத்தில் விவசாயிகள் வேதனை

கூவத்துார்:கூவத்துார் அடுத்த நெடுமரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.

சம்பா பருவத்தில் தற்போது, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.

ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு போன்ற நீராதாரங்கள் வாயிலாக, இந்த நெற்பயிர்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது.

வயல்வெளிகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள், கடந்த மாதம்,'பெஞ்சல்' புயல் காரணமாக சேதமடைந்தன. அவை, தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், 15க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களுக்கு மின்சாரம் கிடைக்காமல், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெல் வயல்கள் வறண்டு வருகின்றன.

மேலும், நெடுமரம் கிராமத்திற்கு நிரந்தர,'லைன்மேன்' இல்லாததால், சேதமடைந்த மின் கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மின் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுமரம் கிராமத்தில் பழுதடைந்துள்ள மின்கம்பிகளை சீரமைத்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement